
Women in Sports Qatar – கட்டாரில் மகளிருக்கான விளையாட்டுக் கழகம்!
கட்டார் வாழ் இலங்கைப் பெண்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தவும், அவர்களின் உடல் உளசார் விருத்திக்கு உதவுமுகமாகவும் நுஸைலா பதுர்தீனால் ‘விமன் இன் ஸ்போர்ட்ஸ் – கட்டார்’ (Women in Sports Qatar) எனும் பெண்களுக்கான விளையாட்டுக் கழகமானது ‘மீண்டும் எங்கள் வாழ்வில்’ எனும் சுலோகத்துடன் டிசம்பர் 6, 2021அன்று முப்பது பெண் அங்கத்தவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.
முதலில் பெண்களுக்கான பெட்மின்டன் பூப்பந்தாட்ட விளையாட்டுப் பயிற்சிக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பயிலுனர்களை ஊக்குவிக்குமுகமாக முதலாவது உள்ளக பூப்பந்தாட்டப் போட்டி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.
இதில் கட்டாருக்கான இலங்கைத் தூதுவரின் பாரியார் ெடாக்டர் செஷூன் மொஹிதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதனையடுத்து கட்டார் விளையாட்டு தினத்தன்று பெண்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் சர்வதேச மகளிர் தினத்தன்று அதிகாரபூர்வமாக மின்னஞ்சல் முகவரி, முகநூல், புலனம் மற்றும் படவரி விபரங்கள் வெளியீடு என்பன இடம்பெற்றன.
இக்கழகமானது பெண்களின் விருப்பங்களைக் கருத்திற் கொண்டு நீச்சல் மற்றும் வலைப்பந்து விளையாட்டு பயிற்சிகளுக்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு அதிக பெண்களை கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இக்கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘ EID Sports Meet 2022’ பெருநாள் சிறப்பு விளையாட்டு நிகழ்வில் ஏராளமான பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதுமட்டுமன்றி இவ்வமைப்பு இலங்கை மக்களுக்கான மருத்துவ தேவைக்கு உதவுமுகமாக ஒரு தொகை நிதியை கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் மபாஸ் மொஹிதீன் அவர்களிடம் கையளித்து தனது சமூக அக்கறையையும் பங்களிப்பையும் உணர்த்தியுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் ஏற்பாடு செய்திருந்த அங்கத்தவர்களுக்கான இலச்சினை பதித்த பிரத்தியேக ஆடை (ரிசேர்ட் ) மற்றும் அங்கத்தவர்களின் அறிமுகப்படல நிகழ்வு கட்டாரிலுள்ள ஈரானிய பாடசாலையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதில் பிரதம அதிதிகளாக கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் மபாஸ் மொஹிதீன் மற்றும் அவரது பாரியார் ெடாக்டர் செஷூன் மொஹிதீன் ஆகியோரும், சிறப்பு விருந்தினராக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தலைமை தூதரக அதிகாரி அப்துல்லாஹ் இப்ராஹிம் நூர் அல் இமாதியும் பல்வேறு துறைசார்ந்த புத்திஜீவிகள் மற்றும் வல்லுனர்களும் கலந்து கொண்டனர்.
இவ்வமைப்பானது பூப்பந்தாட்ட மற்றும் வலைப்பந்தாட்டப் போட்டிகளை எதிர்வரும் வாரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது.
30அங்கத்தவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கழகம் குறுகிய காலத்தில் தற்சமயம் 400அங்கத்தவர்களை உள்ளடக்கி வளர்ச்சி அடைந்து வருகின்றது.
இதற்கு இலங்கைப் பெண்களின் விளையாட்டு ஆர்வமும் அவர்களின் ஆர்வத்தை புரிந்து விளையாட்டுக்களை ஒழுங்கமைத்துக் கொடுக்கும் ஒரு களமாக இக்கழகம் செயற்படுவதுமே காரணமாகும். அதுமட்டுமன்றி இது சிறப்பாக செயற்படுவதற்கு நிர்வாகக்குழு, அங்கத்தவர்கள், பங்களிப்பாளர்கள் மற்றும் நலன்விரும்பிகள் வழங்கிவரும் ஒத்துழைப்பு அளப்பரியது என கழகத்தின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த ஜீவிதா திருச்செல்வம் தெரிவித்தார்.