மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் மதிய உணவை நிறுத்துமாறு உத்தரவு!
-அப்துல்ஹாதி-
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளிலும் வழங்கப்பட்டு வந்த மதிய உணவு விநியோகத்தை உடனடியாக நிறுத்துமாறு இன்று (01.03.2014) செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணிக்குப் பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் உணவு தயாரித்து விநியோகம் செய்யும் சமூர்த்திப் பயனாளிகளான ஏழைகள் தாங்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறுகின்றனர்.
நாளை புதன்கிழமைக்குரிய விநியோகத்துக்கான உணவுப் பொருட்களை வாங்கி அவற்றை உணவு சமைப்பதற்கான தயார்படுத்தல் வேலைகளில் தாம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது இறுதி நேரத்தில் உணவு விநியோகிக்கக் கூடாது என்ற அறிவித்தல் தங்களுக்குத் தரப்பட்டதால் தாங்கள் நிலைகுலைந்து போய் விட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 63 பாடசாலைகளில் சுமார் 14 ஆயிரம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகின்றது.இந்த உணவு தயாரிப்பதிலும் விநியோகிப்பதிலும் எண்பது தொடக்கம் நூறு மாணவர்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் சுமார் 140 சமூர்த்திப் பயனாளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்று தெரியவருகின்றது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள போஷாக்குணவு வழங்கும் சகல பாடசாலை அதிபர்களுக்கும் நாளை புதன்கிழமைக்கான உணவு விநியோகத்தை நிறுத்துமாறு தான் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணியிலிருந்து அறிவித்து வருவதாக உணவுப் போஷாக்கு இணைப்பாளர் எஸ்.எல்.எம். இப்றாஹிம் தெரிவித்தார்.
கணக்காளரிடமிருந்து கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தலுக்கமைய தாங்கள் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு இன்று மாலை அறிவித்திருப்பதாக ஏறாவூர் கோட்டக்கல்வி அதிகாரி ஐ.எல். மஹ்ரூப் கூறினார்.
நேற்று மார்ச் 31 ஆம் திகதி பிற்பகல் சத்துணவு இணைப்பாளர் உதயகுமாரிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஈ மெயில் அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த உணவு விநியோகத்தை நாளை புதன்கிழமையிலிருந்து நிறுத்துமாறு கேட்டிருக்கின்றோம் என்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கணக்காளர் எம்.எஸ். பஷீர் தெரிவித்தார்.
பாடசாலைத் தவணை விடுமுறை வழங்கப்படுவதற்கு முன்பதாக உணவு விநியோகத்தை நிறுத்துமாறு நாம் பணிக்கப்படுவோம் இது வழமைதான் ஆனால் குறிப்பிட்ட எந்தத் தினத்தில் நிறுத்த வேண்டும் என்று எமக்கு திடீரென்றுதான் அறிவித்தல் வரும் அதனை நாம் அமுல்படுத்துவோம் என்றார் கணக்காளர் எம்.எஸ். பஷீர்.
