கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கடந்த 8 வருடங்களாக அதிகரிக்கப்படாது தொடர்ச்சியாக அரசினால் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வரும் 15 சதவீத சம்பள உயர்வு உடனடியாக வழங்க கோரி கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் வந்தாறுமூலை வளாக முன்றலில் புதன்கிழமை (13) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் ஏகாம்பரம் ஜெகராஜு தலைமையில் நடைபெற்ற  கவனயீர்ப்பு போராட்டத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

2016ம் ஆண்டின் பட்ஜெட் முன்மொழிவுக்கு அமைய அரச ஊழியர்களுக்கு முன்மொழியப்பட்ட 107சதவீத சம்பள அதிகரிப்பில், தேசிய சம்பள ஆணைக்குழு மற்றும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் என்பவற்றின் செயற்பாடுகள் காரணமாக பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பளம் 92 சதவீத மட்டுமே அதிகரிப்புச் செய்யப்பட்டது.

பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தருவதாக அரசினால் வாக்குறுதியளிக்கப்பட்டு இன்றுவரை வழங்கப்படாதுள்ள 15 சதவீத சம்பள அதிகரிப்பை வழங்க கோரல், மாதாந்த இடர் கொடுப்பனவை அதிகரித்தல், அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பள அதிகரிப்புச் செய்யுமாறு அரசை வலியுறுத்தல், பல்கலைக்கழகங்களில் காணப்படும் பதவி வெற்றிடங்களை நிரப்பி நிருவாக விடயங்களை சுமுகமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுத்தல், உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 8 தேசிய தொழிற்சங்கங்கள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பு ஒன்றிணைந்து இந்த வாரம் தொடக்கம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவது என எடுத்த தீர்மானத்திற்கு ஏற்ப நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஒன்றறை நாள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அமைவாக கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி கோரிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி 2023.11.02, 2024.01.18 மற்றும் 2024.02.28 ஆகிய தினங்களில் அடையாள பணிபகிஷ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டபோதும் அவற்றுக்கு சாதகமான பதில்கள் அரசினால் வழங்கப்படாததன் காரணமாக இந்த திடீர் பணி பகிஷ்கரிப்பு நடைபெற்றது.

செங்கலடி செய்தியாளர் பே.சபேஷ்

Previous post பால் மா விலை குறைப்பு!
Next post கஃபாவின் சாவியை பாதுகாக்கும் தற்போதைய காவலர்கள்!