ஐநா அறிக்கை வெளியீட்டை தாமதப்படுத்துமாறு இலங்கை கோரிக்கை
ஐநாவின் தலைமைச் செயலர் பான் கி மூனை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இலங்கை மீதான விசாரணை அறிக்கை வெளியீட்டை தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் உள்ள ஐநாவின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இந்த சந்திப்பு நடந்துள்ளது.
இலங்கையின் இறுதிக் கட்டப்போரின் போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட ஐநா விசாரணையின் அறிக்கை வெளியீட்டைத் தாமதப்படுத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் விருப்பத்தை மங்கள சமரவீர இதன்போது வலியுறுத்தியதாக ஐநாவின் இராஜதந்திர துறைத் தகவல்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பான்-கி- மூனும் மங்கள சமரவீரவும் ‘மனித உரிமைகள் விவகாரம், பொறுப்பு சுமத்துதல் மற்றும் நல்லிணக்கம் உள்ளிட்ட இலங்கைக்கு முக்கியமான விவகாரங்கள்’ பற்றி பேச்சுநடத்தியதாக ஐநாவின் ஊடக அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் செய்த் அல் ஹுசைனின் அலுவலம் எதிர்வரும் மார்ச் 25-ம் திகதி இலங்கை மீதான விசாரணை அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையை தாமதப்படுத்த வேண்டும் என்ற இலங்கையின் விருப்பம் பற்றி ஐநா தலைமைச் செயலருடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் எந்தவொரு தகவலும் ஐநாவின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
ஐநா அறிக்கையை தாமதப்படுத்துமாறு அமெரிக்காவையும் ஐநாவையும் பேசி இணங்கச் செய்யும் முயற்சியில் மங்கள சமரவீர ஈடுபட்டுள்ளார்
ஆனால், முன்னதாக இந்த வாரத்தின் முற்பகுதியில் வாஷிங்டனில் கருத்து வெளியிட்டிருந்த இலங்கையின் வெளியுறவு அமைச்சர், நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு ஐநா அறிக்கையை ஆகஸ்ட் வரையாவது தாமதப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
பெயர் விபரம் குறிப்பிட விரும்பாத ஐநா அதிகாரிகளை மேற்கோள்காட்டியுள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், பான் கி மூனுடன் மூடிய அறைக்குள் நடந்த சந்திப்பின்போது, இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஐநா அறிக்கையை தாமதப்படுத்தும் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கூறியுள்ளது.
ஆனால், ஐநா மனித உரிமைகள் பேரவையின் உயர் ஆணையர் செய்த் அல் ஹுசைனின் கீழ் வருகின்ற இந்த விடயம் தன்னுடன் தொடர்புபட்டது அல்ல என்று பான் கி மூன் மங்கள சமரவீரவிடம் கூறிவிட்டதாக ஐநா தகவல்கள் கூறியுள்ளன.
மங்கள சமரவீர, தனது அமெரிக்கப் பயணத்தை ஐநா மற்றும் அமெரிக்க அதிகாரிகளை பேசி இணங்க வைக்கும் முயற்சிக்குப் பயன்படுத்தியுள்ளார்.
இலங்கையில 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரின்போது நடந்துள்ள பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்த அரசாங்கம் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஐநாவின் மனித உரிமைகள் பேரவை, அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான தீர்மானத்தை கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றியிருந்தது.
அதன்பின்னர், ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக் குழு இலங்கைக்கு வெளியிலிருந்து விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
