வடக்கு முஸ்லிம் மக்கள் தொடர்பில் குழப்பமான கருத்துக்கள் வேண்டாம்! அவர்களுக்கு பரிகாரம் காணப்பட வேண்டும் -டக்ளஸ் தேவானந்தா

ஊடக அறிக்கை
18. 11. 2015.

வடக்கு மாகாணத்தைவிட்டு எமது சகோதர மக்களாகிய முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு இருபத்தைந்து வருடங்கள் முடிவுற்றுள்ள நிலையில், அம் மக்களுக்கான இழப்புகள் தொடர்பில் பரிகாரங்களைக் காண்பதற்கான நடவடிக்கைகளுக்கு முயலாமல், சுயலாப நோக்கிலும், இனங்களுக்கிடையில் தற்போது ஏற்பட்டுவரும் சுமுகமான உறவுகளைக் குழப்பும் நோக்கிலும் ஒரு சிலர் தெரிவித்துவருகின்ற கருத்துக்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், வடக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களும் நாமும் சகோதர சமூகங்களாகவே வாழ்ந்து வந்திருந்தோம். இம் மக்களை இரண்டு மணி நேரக் காலக்கெடு விதித்து, சொப்பின் பேக்குகளுடன் மாத்திரம் வெறியேற்றப்பட்டமை பாரிய தவறாகும். இதனை நாம் அன்று தொடக்கம் இன்றுவரை கண்டித்தும், மேற்படி வரலாற்றுத் தவறினை தொடர்ந்து அம்பலப்படுத்தியும் வந்துள்ளோம்.

அது மட்டுமல்லாது, இம் மக்கள் நிர்க்கதியான நிலையில் புத்தளம் பகுதிக்கு வந்திருந்தபோது, எமது கட்சி நிதியைப் பயன்படுத்தி காணிகள் கொள்வனவு செய்து, குடியிருப்புக்களை அமைத்துக் கொடுத்தோம். அந்த குடியிருப்பு “தேவா பாத்’’ என்றழைக்கப்படுகிறது. அடிப்படை வசதிகள், நிவாரண உதவிகள், வாழ்வாதார ஏற்பாடுகள், கல்விசார் வசதிகள் என்பனவற்றை எமது பலத்திற்கு ஏற்றவாறு செய்துகொடுத்தோம். முன்பள்ளிகளை அமைத்து, ஆசிரியைகளை நியமித்து அவர்களுக்கான கொடுப்பனவுகளை தொடர்ந்து வழங்கி அன்றைய சிறார்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். அத்துடன், இம் மக்களின் தேவைகளை அன்றாடம் கவனித்து, அவற்றைத் தீர்ப்பதற்காக எமது கட்சியின் அலுவலகமொன்றைத் திறந்து, அதற்கொரு பொறுப்பாளரையும் நியமித்தோம். பின்னர், அப் பொறுப்பாளர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அன்றைய காலகட்டத்தில் இம் மக்களது துயர் துடைக்க முன்வராதவர்கள், இன்று மீண்டும் இரு சமூகங்களுக்கிடையிலும் விரிசல் நிலையை ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்களை முன்வைத்துவருவது ஆரோக்கியமான விடயமல்ல. கடந்தகால கசப்பான தவறுகளை உணர்ந்து, அவ்வாறான தவறுகள் மீண்டும் இடம்பெறாதிருக்கும் வகையில் இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவே நாம் தொடர்ந்து உழைத்து வருகின்றோம். அதற்கு எமது மக்களை நேசிக்கும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வருவதை விடுத்து, குழப்பங்களை உண்டுபண்ணக்கூடிய இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

வடக்கு முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு அன்று முதல் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் நாம், கடந்த காலங்களில் அதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வந்திருந்தோம்.

எனவே, இவ்வாறான சுயநல அரசியல்வாதிகள் மேலும், மேலும் தவறான கருத்துப் பரிமாற்றல்களை மேற்கொள்ளாமல், இம் மக்களின் இழப்புகளுக்கும், மீள் குடியேற்றத்திற்கும் பரிகாரம் காண முன்வர வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous post 2016 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைத் திகதிகள் வௌியீடு!
Next post தடாகம் கலை வட்டத்தின் கௌரவிப்பு நுால் வெளியீடு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில்