அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளே சர்வதேச அழுத்தங்களுக்கு காரணம் -சஜித் பிரேமதாச
-TTI-
அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளே சர்வதேச அழுத்தங்களுக்கு காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைத்தல் உள்ளிட்ட பல பொய்யான வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கியுள்ளது.
நாட்டுக்கு பாதகம் ஏற்படக் கூடிய சில சர்வதேச கூட்டு பிரகடனங்களிலும் அரசாங்கம் கையொப்பமிட்டுள்ளது. தற்பொது இந்த நாடு உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியாகவும் பல்வேறு அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றது.
ஆட்சியாளர்களின் கவனயீனமே பிரச்சினைகள் ஏற்பட பிரதான காரணம். அரசாங்கம் தூர நோக்கமின்றி செயற்பட்டு வருகின்றது.
இந்த நெருக்கடிகளினால் அரசாங்கம் மட்டும் பாதிப்புக்களை அனுபவிக்கவில்லை, ஒட்டுமொத்த நாடும் அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றன.
அரசாங்கம் இந்த நெருக்கடி நிலைமைகளை மூடிமறைத்து, அரசியல் லாபமீட்டக் கூடிய பிரசாரங்களை செய்து வருகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இம்முறை இலங்கைக்கு பாதகமான தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது.
அரசாங்கத்தின் பிழையான இராஜதந்திர அணுகுமுறைகளே நாடு அபாயங்களை எதிர்நோக்கக் காரணமாகும்.
நாடு என்ற ரீதியில் சர்வதேச அரங்கில் தனித்து செயற்பட முடியாது. இலங்கைக்கு உலக அளவில் நல்ல பெயரும் நன்மதிப்பும் காணப்பட்டது.
இவற்றை தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்குபற்றிய போது சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

