‘தேசத்துக்கு மகுடம்’ கண்காட்சி ஜனாதிபதியால் திறந்துவைப்பு!
தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
“உன்னதமான சமாதானத்தின் ஊடாக வளமான தேசம்” என்ற தொனிப்பொருளில் இம்முறை 8 ஆவது தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டியவில் அமைந்துள்ள வடமேல் மாகாண பல்கலைக்கழகம், தொழில்நுட்பக்கல்லூரி, குளியாபிட்டிய மத்திய மகா வித்தியாலயம் ஆகிய இடங்களை உள்ளடக்கிய 162 ஏக்கர் காணியில் இக்கண்காட்சி இடம்பெறுகிறது. எதிர்வரும் 27ம் திகதி வியாழக்கிழமை வரை இக்கண்காட்சி நடைபெறும்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷயின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் உட்பட சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள் தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 500 க்கும் அதிகமான காட்சி கூடங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சி பூமியில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தையும் திறந்து வைத்து அங்கு காணப்பட்ட புகைப்பட கண்காட்சியையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு வெளியிடப்பட்ட முத்திரை இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
MT




