இலங்கைக்கான வேலைவாய்ப்பு கோட்டாவை அதிகரிக்க தென்கொரியா இணக்கம்

இலங்கை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு கோட்டாவை அதிகரிப்பது குறித்து தனது நாடு கவனத்திற்கொள்ளுமென தென்கொரியாவின் மனிதவள அபிவிருத்தி சேவை தலைவர் போராசிரியர் பார்க் யங் பம் (Park Young-bum) தெரிவித்தார். பேராசிரியர் பார்க், இன்று (28) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

விவசாயத்துறையில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு கோட்டாவை அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடு குறித்து ஜனாதிபதி அவர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மீன்பிடி மற்றும் விவசாயத்துறையில் உள்ள ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியமைக்காக தென்கொரிய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். கொரியாவில் 25,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தொழில் செய்வதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார். இலங்கைக்கான வருடாந்த வேலைவாய்ப்பு கோட்டா தற்போது 6,000 எனத் தெரிவித்த அவர், கொரியாவுக்கு தொழிலாளர்களை அனுப்பும் 16 நாடுகளில் இலங்கை தற்போது 5 ஆவது இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர்களின் செயலாற்றுகை மற்றும் வினைத்திறன் குறித்து கொரிய தொழில் வழங்குனர்கள் திருப்தியடைந்துள்ளதாகத் தெரிவித்த பேராசிரியர் பார்க், விவசாயத்துறையில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்புக் கோட்டாவை அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயவுள்ளதாகத் தெரிவித்தார். அண்மையில் கொரியாவில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீயின்போது தனது உயிரைப் பணயம் வைத்து பெண் ஒருவரைக் காப்பாற்றிய இலங்கை ஊழியரின் செயல் காரணமாக கொரியாவில் இலங்கை ஊழியர்கள் பிரபல்யம் பெற்றிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொரியா அடைந்துள்ள துரித அபிவிருத்தி குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர் தலதா அத்துகோரல, கொரிய குடியரசின் தூதுவர் வொன் சாம் சேன்ங் (Won-Sam Chang) மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் ராஜ் ஒபேசேக்கர ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Previous post புத்தனைக் கண்டேன்!
Next post புதிய அரசியலமைப்பு: இடைக்கால அறிக்கை ஓகஸ்டில்