புத்தனைக் கண்டேன்!
SLM Haneefa
சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலம்.
பௌஸி போக்குவரத்து அமைச்சர்.
இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட அரைச்சொகுசு பஸ்ஸில் கொழும்பிலிருந்து ஒரு இரவுப் பயணம்.
கடைசி பஸ். களுவாஞ்சிக்குடி – மட்டக்களப்பு.
உடல்நலம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பொழுது, மறைந்த அன்பர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் அருமை நண்பர் டாக்டர் சிவகுமாரன் அவர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொண்டு, இரவோடிரவாக ஊருக்குத் திரும்புகிறேன்.
பஸ் நடத்துநரிடம் ஓர் இருக்கை கேட்டேன்.
முன்வரிசையில் குருமார்களுக்கான இருக்கையை எனக்குக் காண்பித்தார்.
இரவில் எந்தத் துறவியும் வரமாட்டார் சேர். நீங்கள் பயப்படாமல் இருங்கள் சேர் என்றார்.
நான் கோணர் சீட்டில் அமர்ந்த சில நிமிடங்களில் ஒரு சாது பஸ்ஸுக்குள் ஏறினார்.
நான் இருக்கையை விட்டும் எழுந்தேன். உடனே என் தோளைப் பிடித்து அழுத்தி உட்காரும்படி செய்தார்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
சாது, “நீங்கள் எனக்கு முதல் வந்து அமர்ந்திருக்கிறீர்கள். நீங்களும் என்னைப் போன்ற மனிதர்தான். தாராளமாக நாமிருவரும் பயணிப்போம்” என்றார்.
இது இரண்டாவது அதிர்ச்சி.
சில முகங்களைக் கண்டால் நாங்கள் வலிந்தே பேசுவோம். சாதுவின் முகமும் அவரின் உடல்மொழியும் அவருடன் உரையாட வேண்டும் போல எனது மனசு துடித்தது.
உரையாடலில் கிடைக்கும் இன்பம் வேறெங்கே கிடைக்கும்.
சாதுவே பேச்சை ஆரம்பித்தார்.
என்னைப் பற்றிய முழு விபரங்களையும் அவரிடம் கொட்டித் தீர்த்தேன்.
வடகிழக்கு நிலைமை பற்றியெல்லாம் கேட்டுக் கொண்டார்.
இனப்பிரச்சினை தொடர்பில் நன்கு தெளிவானர் என்பதையும் புரிந்து கொண்டேன்.
பஸ்ஸின் உள்ளுறுப்புகளை அவர் கண்கள் ஒரு சுழற்சியில் மேய்ந்து வந்தன.
திடீரென்று அவர், “உங்கள் போராட்டம் நியாயமானதுதான்” என்றார்.
இந்த பஸ்ஸே அதற்கான சாட்சியென்று இன்னொரு போடு போட்டார்.
இதில் மனிதர்கள் பயணிக்க முடியுமா? என்றார்.
அரைச்சொகுசு பஸ், அடித்து நொறுக்கிய பஸ் போல் காட்சி தந்தது.
பஸ், வரகாபொலயில் இரவுணவுக்காகத் தரித்தது.
நானும் சாதுவும் பஸ்ஸை விட்டு இறங்கினோம்.
நான் எதுவும் சாப்பிடவில்லை. சாது, ஹோட்டல் ஊழியரிடம் ஐந்து இடியப்பங்களும் ஏதாவது கறியும் கேட்டார்.
பஸ் கிளம்பும் வரையிலும் ஹோட்டல்காரர்கள் அவருக்குரிய பார்சலைக் கொடுக்கவில்லை.
எனது வழமையான கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
அது ஒரு முஸ்லிம் ஹோட்டல்.
நான் முதலாளியை அழைத்து மிகக் கடுமையாகப் பேசினேன்.
“எங்களிடம் இறைச்சிகறிதான் உண்டு” முதலாளி.
சாதுவுக்கு அந்த வார்த்தை விளங்கி விட்டது.
பரவாயில்லை. இறைச்சி வேண்டாம், சொதியை மட்டும் கட்டித் தாருங்கள் என்றார்.
முதலாளியைப் பார்த்து நான், அழகிய நடைமுறையைக் கைக்கொள்ளுங்கள். இந்த சாது ஒரு அற்புதமான மனிதர். இவரை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்றேன்.
சாது என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார்.
மீண்டும் பஸ் புறப்பட்டது. சாதுவும் நானும் தொடர்ந்து உரையாடி வந்தோம்.
கலேவெலயை நெருங்கிக் கொண்டிருக்கும் போது, நான் இறங்கும் இடம் வருகிறது. நாம் மீண்டும் ஒரு முறை சந்தித்துப் பேச வேண்டும் என்றார்.
நானும் ஓட்டமாவடிக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தேன்.
அன்றிரவு நான் சாதுவுடன் எவ்வளவோ விடயங்கள் பேசினேன். அவை இப்போது ஞாபகத்தில் இல்லை.
எனது மூன்று நான்கு வயதுச் சம்பவங்கள் எத்தனையோ மனதில் கிடந்து கண் சிமிட்டுகிறது.
வயது கூடக்கூட மறதிகளும் கூடுகிறதோ.
கலேவெல பெரிய விகாரை வந்தது. அன்று பௌர்ணமிக்கு முதல் நாள், மேற்கே பால்போல் நிலவு வெண்தூபியை தாலாட்டிக் கொண்டிருந்தது.
சாது பஸ்ஸை விட்டும் இறங்கி நடந்தார். தூபியின் நிழலையும் தாண்டி சாதுவின் நிழலையும் பால்நிலவு அபிஷேகம் செய்தது.
என் இனிய நெஞ்சில் நிறைந்த சாதுவே! உங்களை அன்று கண்டதும் கதைத்ததும் என் வாழ்வின் மறக்க முடியாத தருணம்.
மீண்டும் உங்களை எங்கே எப்போது காண்பேனே!
நான் கண்டது புத்தன்தானோ!
