வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை; அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி – இடை நடுவில் நிறுத்தப்பட்ட கார் – வெளியான புதிய தகவல்!
வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதன்படி, வர்த்தகர் தினேஷை கொலை செய்ய முயற்சித்ததாக கருதப்படும் கொலையாளி, கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன் தோமஸிற்கு அனுப்பிய குறுஞ்செய்தி தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் குறுஞ்செய்தி, கொலையாளியினால், வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் தொலைபேசியில் இருந்து அனுப்பப்பட்டதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து பிரையன் தோமஸின் தொலைபேசிக்கு அனுப்பப்பட்ட, இந்தக் குறுஞ்செய்தி, பொரளை பொது மயானத்தில் இருந்து அனுப்பப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த குறுஞ்செய்தியில், I’m waiting for, (நான் உங்களுக்காக காத்திருக்கிறேன்) என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தமக்கு சந்திக்கும் எண்ணம் இல்லை என்று தோமஸ் அக் குறுஞ்செய்திக்கு பதிலளித்திருந்தார்.
இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட தினத்தன்று, தினேஷ், ஃப்ளவர் வீதியில் உள்ள தமது வீட்டிலிருந்து நேரடியாகவே, பொரளை பொது மயானத்திற்கு வந்ததாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பில் பல சந்தேகத்திற்குரிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பல ஆச்சரியமான தகவல்களும் வெளியாகியுள்ளன என்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் தினேஷ் சாப்டர் தனது வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் பொரளை பொது மயானத்திற்கு சென்றுள்ளதுடன் இடை நடுவில் ஒரேயொரு இடத்தில் மாத்திரம் தான் பயணித்த வாகனத்தை நிறுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி அவர் தனது வீட்டுக்கும் பொரளை பொது மயானத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் சிற்றுண்டி உண்பதற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளமை குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பல இடங்களில் 42 சிசிடிவி கமரா அமைப்புகளின் காட்சிகள் தற்போது குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை நேற்றைய தினம் (19.12.2022) தினேஷின் மனைவியிடம் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
4 மணித்தியாலங்களுக்கும் மேலாக அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள போதும் மீண்டும் தேவைப்பட்டால் அவரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை பிரிவினர் பிரத்தியேக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த விபரங்களை சரிபார்த்த பின்னர், பல தகவல்கள் வெளிவரக்கூடும் என்றும் குற்றப்புலனாய்வு அதிகாரி குறிப்பிட்டுள்ளதாக செய்திகளின் வெளியாகியுள்ளன.
மேலும், தினேஷ் ஷப்டர் கொலைச் சம்பவம் தொடர்பில் 15 பேர் சந்தேகிக்கப்படுகின்றனர் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையில் 40 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது எனவும், ஷாப்டரின் நெருங்கிய உறவினர்கள் சிலர் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
