சொந்த பிரச்சினை பற்றி பேசவா பாராளுமன்றம் சென்றார் முஷார்ரப்..?
இலங்கை நாட்டின் மிக உயரிய சபைகளில் ஒன்று தான் பாராளுமன்றம். அங்கு எம்மிடம் நிலவும் மிக முக்கியமான பிரச்சினைகளை இணங்கண்டு பேசுவதே மிக பொருத்தம் எனலாம். இன்று எமது முஸ்லிம் சமூகத்தில் பிரச்சினைகள் மலிந்து கிடக்கின்றன. இவற்றை பற்றியெல்லாம் பேசுவதென்றால் ஆயிரம் பாராளுமன்றங்கள் இருந்தாலும் போதாதெனாலாம். இவ்வாறிருக்கையில் கட்சி பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் சந்தையேற்றியுள்ளார் பா.உறுப்பினர் முஷார்ரப்.
பாராளுமன்றத்தில் (06) பேசிய முஷார்ரப், தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை நீதிமன்றம் பிழை என்றுள்ளது, என்னை கட்சியிலிருந்து நீக்கியது பிழை, நீதிமன்ற தீர்ப்பால் தனக்கு வாக்களித்த மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள் என்ற வகையிலேயே தனதுரையை அமைத்திருந்தார். இதனை இவர் பாராளுமன்றத்தில் பேசுவதன் நோக்கமென்ன? இது கட்சியின் உள் விவகாரம். இதனை பாராளுமன்றத்தில் சந்தைப்படுத்துவதன் மூலம் அவர் அடையப்போகும் இலாபமென்ன என்ன வினாவுக்கு ” எதுவுமில்லை ” என்ற பதிலை தவிர வேறேதுமிருக்காது.
பாராளுமன்றமெனும் உயரிய சபையை மிக இலாவகமாக, மக்கள் பிரச்சினையை தீர்க்கும், வெளிப்படுத்தும் ஒரு இடமாக பயன்படுத்த வேண்டுமே தவிர, இவ்வாறான உட் பிரச்சினைகளை வெளிப்படுத்த பயன்படுத்துவது பொருத்தமாகாது. இது முதிர்ச்சியான ஒருவருக்கு அழகுமல்ல. இவ் விடயமானது பா.உறுப்பினர் முஷார்ரபின் முதிர்ச்சியற்ற தன்மையையே வெளிப்படுத்துகிறது. தனக்கு நீதி மறுக்கப்பட்டால், நீதி தேடி, பாராளுமன்றத்தில் பேசுவது தவறாகாது. நீதிமன்ற தீர்ப்பு பா.உறுப்பினர் முஷார்ரபுக்கு சாதாகமாகவே வந்திருந்தது. நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து ஊடகவியலாளர் மாநாட்டில் தீர்ப்பு தொடர்பில் குதூகலித்திருந்தார் முஷார்ரப். தேவையென்றால் இன்னும் ஆயிரமாயிரம் ஊடக மாநாட்டை நடாத்தி மகிழ்ந்திருக்கலாம். பாராளுமன்றம் எனும் உயரிய சபையை பயனற்ற இச் சிறு விடயங்களை சந்தைப்படுத்த பாவிப்பது, அதன் கௌரவத்தை மலினப்படுத்துகிறது எனலாம்.
இது ஒன்றும் முதல் தடவையல்ல. இதற்கு முன்பான பாராளுமன்ற உரையொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸை ” மிஸ்டர் புளொக் ” என அழைத்து விமர்சித்திருந்தார். இவ் விடயத்தை அவரது ஆதரவாளர்கள் அறியாமையினால் தூக்கி, ஆடியுமிருந்தனர். ஒருவரை விமர்சிக்க முறையுண்டு, தேவையற்ற பெயர் சூட்டி, விமர்சிப்பதெல்லாம் முதிர்ச்சியான ஒருவரின் செயலல்ல. இவ்வாறான பட்டப்பெயர் சூட்டுவதை இஸ்லாமும் மிக கடுமையாக கண்டித்துள்ளதாகவே கருதுகிறேன். முதிர்ச்சியான அரசியலை முன்னெடுக்க முஷார்ரப் முன்வர வேண்டும்.
பா.உ முஷார்ரப் அண்மையில் நடைபெற்றிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலும் ஒரு ஊரின் முக்கிய இரு கல்வியலாளர்களை இகழ்ந்து பேசியிருந்தார். ஊடகமொன்றில் ஒரு நபரின் பெயரை பயன்படுத்துவதாக இருந்தால், எவ்வளவு கவனமாக பயன்படுத்த வேண்டும். ஊடக விருது பெற்ற ஊடகவியலாளரான முஷர்ரபுக்கு அந்த ஊடக நாகரீகம் தெரியாமல் போனதென்ன? பா.உறுப்பினர் முஷார்ரப் முதிர்ச்சியற்று அல்லது தன்னிலை மறந்து மமதையில் மிதப்பதை இவ்விடயங்கள் துல்லியமாக்கின்றன.
இன்று ஏன் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என கேட்கலாம். இது பா.உ முஷார்ரப் மக்களை உணர்ச்சியூட்டி, அரசியல் செய்ய காத்திருந்த விடயமாகும். தனது பாராளுமன்ற உரை மூலம் தனதூர் மக்களை உணர்ச்சியூட்ட முனைகிறார். உணர்ச்சியூட்டி அரசியல் செய்வதில் முஷார்ரப் வல்லவராவார். இரு முக்கிய கல்வியலாளர்களை இகழ்ந்த விடயத்தில் முழுச் சமூகமும் முஷார்ரபுக்கு எதிராக திசை திரும்பியுள்ளது. இதனை வேறு திசை நோக்கி திருப்ப ஏதாவதொரு சர்ச்சையை தோற்றுவிக்க வேண்டிய நிர்ப்பந்தில் உள்ளார் முஷார்ரப். ” பிரச்சினைக்கு தீர்வு வேறொரு பிரச்சினையை தோற்றுவிப்பதே ” என்ற தியரியை பா.உறுப்பினர் பாவிக்க முனைகிறார் என்றே தோன்றுகிறது.
பா.உறுப்பினர் முஷார்ரப் பாராளுமன்றம் சென்றது, தனது சொந்த பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கல்ல. தனது சமூகத்தின் பிரச்சினைகளை எடுத்துரைக்கவே!
பாராளுமன்றமெனும் உயரிய சபையை மக்கள் பிரச்சினைகளை முன் வைக்கும் ஒரு இடமாக பயன்படுத்த வேண்டும். மக்களை உணர்ச்சியூட்டி அரசியல் செய்வதெல்லாம் நீண்ட காலம் நிலைக்கப்போவதில்லை. இவ் உண்மை தேசிய ஆரசியலில் தெட்டத் தெளிவாக பிரகாசிப்பதை பா.உ முஷார்ரப் மறத்தலாகாது.
