கோட்டாவின் புத்தக வெளியீடு இன்று – ஆரம்பமும் முடிவும் சிக்கல்!
இலங்கையின் ஜனாதிபதி பதவியிலிருந்து தாம் வெளியேற்றப்பட்டதற்கு காரணமான போராட்டங்கள் தொடர்பான புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரின் பங்களிப்புடன், குறிப்பாக இலங்கையில் ஜனநாயகத்தை குழிபறிக்கும் வகையில், ஆர்வமுள்ள வெளிநாட்டுக் கட்சிகளால் ஜனாதிபதி பதவியில் இருந்து அவரை வெளியேற்றுவதற்கான சதித்திட்டம் குறித்து முன்னாள் ஜனாதிபதியே ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
‘என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி’ என்ற புத்தகம் இன்று மார்ச் 07, 2024 வியாழக்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை இந்த புத்தகம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் குறித்த புத்தகத்தின் ஆரம்பமும் முடிவும் சிக்கலாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
பிரசுரத்தின் அட்டையில் “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய சதி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் பின் அட்டையில் 2022ஆம் ஆண்டு ஜுலை மாதம் நான் அந்தப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் அட்டையில், பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் பின் அட்டையில், தான் இராஜினாமா செய்ய வேண்டியிருந்தாகவும் உள்ளமையினால் 2 விடயங்கள் தொடர்பாக இரண்டு எதிர் கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
“ராஜபக்சவை பதவி நீக்கம் செய்த சர்வதேச ஆதரவுடன் அமைதியான மக்கள் போராட்டம் இலங்கையின் ஜனநாயகத்தை கீழறுக்கும் செயலாகும்” என முகப்பு அட்டையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
