உயர்த்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் மாகண மட்டத்தில் முதலிடம் – அமீர் அலி வாழ்த்து!

பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட க.பொ.த (உ/த) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் 75.5% மான சித்தி மட்டத்தைப் பெற்று மாகண மட்டத்தில் முதலாவது இடத்தினைப் பெற்றிருப்பது மிக்க மகிழ்ச்சியை தருவதாகவும்,இதற்காக உழைத்த வலயக்கல்விப் பணிப்பாளர் உட்பட அனைத்து கல்விப் புல அதிகாரிகள்,பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் தனது மரியாதைக்குரிய வாழ்த்துக்களையும், மனநிறைவான பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும் மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான MSS..அமீர் அலி வெளிவந்த GCE A/L பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி வலயம் மாகண மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளமையை பாராட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“பலத்த எதிர்ப்புக்களுக்கும்,எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியில் உருவாக்கப்பட்ட கல்வி வலயம் மாத்திரமல்ல நிலத் தொடர்பற்ற ஒரு கல்வி வலயம் சாத்தியமே அல்ல என்று எள்ளி நகையாடியவர்களின் முன்னே அதை நான் சாதித்துக் காட்டிய வலயம் என்பதனாலும் இன்று அதன் அறுவடைகளை கண்ணால் காணும் போது எனது அரசியல் வருகைக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகவே இதைப் பார்க்கத் தோன்றுகிறது.

கல்விப் பயணத்தில் எமது பிரதேசமும்,சமூகமும் தடைகளையும்,சவால்களையும் தாண்டி சாதிக்க வேண்டுமானால் கண்ணுக்குப் புலப்படாத அபிவிருத்தியாக இந்த தனிக் கல்வி வலயம் காலத்தின் கட்டாயமாக எனக்குத் தோன்றியது.

“எண்ணித் துணிக கருமம்” என்ற தாரக மந்திரம் எனக்குத் துணிவையும்,தன்னம்பிக்கையையும் தந்தது அதன் அடிப்படையில் எனது எதிர் காலம் சூன்யமாய் தெரிந்தாலும், எனது சமூகத்தின் விடியல் ஒன்றே எனக்கு அன்று பெரிதாகத் தெரிந்தது

அதன் அடிப்படையில் உருவாக்கப் பட்ட இக்கல்வி வலயம் இன்று மற்றவர்களின் நிர்வாக இடையூறுகள் இன்றி வளர்ந்து ஆலாக நிழல் தரத் தொடங்கியுள்ளது மனதுக்கு நிறைவை தருகிறது.

இனி இக்கல்வி வலயம் இன்னும் பல மைல் கற்களை தாண்டி சாதிக்க வேண்டும். கல்வியின் மூலமே எமது சமூகத்தின் உயர்வும்,விடிவும் சாத்தியம் என்பதால் அதற்கு அத்தனை கல்விப் புல ஆளணியினரும் அர்ப்பணிப்போடு உழைக்க வேண்டும் என்று வினயமாகவும் உரிமையோடும் கேட்டுக்கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

Previous post மக்கள் காங்கிரஸுடன் இணைந்துகொண்ட ரிஸ்லி முஸ்தபா!
Next post திருமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம்; திட்டமிட்ட சதி என்கிறார் அப்துல்லா மஹ்ரூப் – ஜனாதிபதி, கல்வி ரிஷாட் பேச்சு!