பொதுபலசேனாவுடன் பங்குடமையை ஏற்படுத்த விரும்பும் “969′

: மியன்மாரில் (பர்மா) முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டும் இயக்கத்திற்கு தலைமை தாங்குபவர் எனக் குற்றஞ் சாட்டப்படும் பௌத்த பிக்குவான அஷின் விராது தமது சமயத்தை பாதுகாப்பதற்காக இலங்கையிலுள்ள கடும்போக்கு பௌத்த குழுவுடன் பங்குடைமையை ஏற்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்.

 

“பர்மாவின் பின்லேடன்’ என்று தன்னைத்தானே ஒருதடவை குறிப்பிட்டிருந்த அஷின் விராது, தனது  சர்ச்சைக்குரிய 969 இயக்கத்தின் கோட்பாட்டை பரப்புவதற்கான தினத்தை முன்தள்ளுவதற்கான சமிக்ஞையை தெளிவான முறையில் வெளியிட்டிருக்கிறார். இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான அணியை கட்டியெழுப்புவதற்கான சமிக்ஞையாக அவரின் அறிவிப்பு காணப்படுவதாக ராய்ட்டர் செய்திச் சேவை நேற்று தெரிவித்திருக்கிறது.

 

“இன்று பௌத்தம் அபாயத்திலுள்ளது. அபாய மணி ஒலித்துக் கொண்டிருப்பதால் நாங்கள் உறுதியாக கரங்கோர்ப்பதற்கான தேவையுள்ளது’ என்று கொழும்பில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மாநாட்டில் அவர் தெரிவித்திருக்கிறார்.
“969 இலங்கையின் பொதுபலசேனாவுடன் கரங்கோர்த்து உலகிலுள்ள சகல பௌத்தர்களையும் பாதுகாப்பதற்கு விரும்புகின்றது என்பதை நான் அறிவிக்க விரும்புகின்றேன்’ என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

 

இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயற்படுவதாக பொதுபலசேனா மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த ஜூனில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தென்னிலங்கையின் கரையோரப் பகுதிகளிலுள்ள இரு பட்டினங்களில் மோதல்கள் இடம்பெற்றிருந்தன. தனது 8 நிமிட உரையில் இலங்கைக்கு வருகை தருவதற்கு தனக்கு விசா வழங்கியதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு அஷின் விராது நன்றி தெரிவித்துள்ளார்.

 

லங்கையிலுள்ள சில முஸ்லிம் குழுக்கள் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. பொதுபலசேனாவின் செயற்பாடுகளை  கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறிவிட்டதாக விமர்சகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கறுப்பு உடை தரித்த விசேட பாதுகாப்பு அதிகாரிகள் புடை சூழ்ந்துவர பொதுபலசேனாவின் மாநாட்டிற்கு அஷின் விராது அழைத்து வரப்பட்டிருந்தார். அந்நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குகள் சமுகமளித்திருந்தனர்.

 

பௌத்தம் ஆபத்துக்குள்ளாகியிருப்பதாக குறிப்பாக முஸ்லிம் தீவிரவாதிகளினால் நெருக்கடிக்குள்ளாகியிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அகிம்சாவழியின் மூலம் தமது மதத்தை பாதுகாப்பதற்கு தனது இயக்கமும் பொதுபலசேனாவும் ஒன்றுசேர வேண்டுமென அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

 

“புத்தபிரானின் புதல்வர்களான பிக்குகளின் கடமையாகவிருப்பது நாகரீகமற்ற தீங்கான ஆட்களுக்கு போதித்து அவர்களை சிறப்பானவர்களாகவும் நாகரீகமுள்ளவர்களாகவும் மாற்றுவதே’ என்று அவர் கூறியுள்ளார்.  ஒரு இடத்தில் அபாயம் காணப்பட்டால் ஏனைய நாடுகள் உதவி செய்து அவர்களை பாதுகாப்பதற்கான தேவை இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆயினும் பொதுபலசேனாவுடன் எவ்வாறு அவர் செயற்படப் போகிறார் என்பது பற்றி வெளிப்படுத்தியிருக்கவில்லை.

 

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதாக ஊகங்கள் அதிகரித்துவரும் நிலையில் பொதுபலசேனாவின் மாநாடு இடம்பெற்றுள்ளது.

 

திர்வரும் ஜனவரியில் தேர்தல் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலின் பெறுபேறுகளை தனது குழு வழிநடத்துமென தனது உரையில் பொதுபலசேனாவின் செயலாளர் நாயகம் கலகொட ஹத்தே ஞானசார தேரர்  தெரிவித்திருக்கிறார்.

 

கிராமங்களிலுள்ள ஆயிரம் விகாரைகளில் வாக்குவங்கியை மாநாட்டில் கலந்து கொண்ட பௌத்த பிக்குகள் உருவாக்க வேண்டுமெனவும் இதன் மூலம் 50 இலட்சம் பௌத்த வாக்குகளை தக்க வைக்க முடியுமென்றும் அவர் கூறியுள்ளார். இலங்கை பல்லின நாடாக இருப்பதிலும் பார்க்க பௌத்த சிங்கள தேசமாக பிரகடனப்படுத்த வேண்டுமென்பதற்கான கொள்கைக் கட்டமைப்பை பொதுபலசேனா முன்வைத்திருக்கிறது. (TKL)

Previous post பொதுபல சேனா என்பது அரசியல்வாதிகளுக்கு வாக்கு சேர்ப்பதற்காக அரசால் உருவாக்கப்பட்டது-முபாறக் அப்துல் மஜீத்
Next post ஏ.எம்.வலிதூர் பிராந்திய முகாமையாளராக பதவி உயர்வு