எதில் நிற்கிறோம் எதில் விழுகிறோம் என்பதில் உறுதியாகவும் கவனமாகவும் இருத்தலே அவசியம்…
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கப் போவதாக கடந்த வாரம் வெளியான தகவல் ஒன்றினால் இலங்கை அரசியலில் விசேடமாக, இந்தக் கட்சியின் பிரதான தளமான கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் பரபரப்பான நிலை காணப்பட்டது. இவ்வாறானதொரு செய்தி வெளிவந்து இரண்டு தினங்கள் கடந்திருந்த நிலையிலும் இந்த விவகாரம் தொடர்பில் கட்சியின் அதிகாரபுர்வ வட்டாரங்கள் தங்கள் நிலைப்பாடு குறித்து எதனையும் தெரிவிக்காது அமைதியாக இருந்தமை குறித்த செய்தியை ஊர்ஜிதம் செய்வது போன்றிருந்தது.
இருப்பினும் பின்னரான நாட்களில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம், செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹஸன் அலி ஆகியோர் தங்களது நிலைப்பாட்டினை விளக்கியதனையடுத்து அந்தப் பரபரப்பு தற்காலிகமாக அடங்கி விட்டது. ஆனால், மக்கள் மத்தியில் இந்த விடயம் குறித்த சந்தேகம் முற்றாக நீங்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே தங்களது நிலைப்பாடு தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டு தீர்மானிக்கப்படுமென அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அடுத்த வருடத்துக்கான வரவு -செலவு திட்டம் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட தினத்தன்று ஆளுந்தரப்பு முக்கியஸ்தர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அலரி மாளிகையில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்தனர். இந்த விடயம் அமைச்சர் ஹக்கீமிடம் தெரிவிக்கப்பட்டபோது அவர் அதனை தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறியிருந்தார். இருப்பினும் அவர்கள் அனைவரும் இந்தச் சந்திப்பினை விரும்பாமை காரணமாக அதற்கு மறுப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுககிறது.
கடந்த காலங்களில் தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட அரசாங்கம் நிறைவேற்றாத நிலையில் இவ்வாறான சந்திப்புகளால் எந்தப் பயனும் இல்லை என்று அவர்கள் ஒட்டுமொத்தமாக கூறியதால் அந்தச் சந்திப்பு இடம்பெறவில்லை. முஸ்லிம் காங்கிரஸை முன்னர் போன்று இலகுவில் வளைத்து விடலாம் என்ற அரச தரப்பின் எதிர்பார்ப்பு ஏதோ அன்றைய தினத்தில் அவர்களுக்கு பலத்த ஏமாற்றமாகவே அமைந்திருந்தது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆளுந்தரப்பைச் சந்தித்து பேசுவதாயின், முன்னர் தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் ஏன் நிறைவேற்றவில்லை என்பதற்கான காரணத்தை எழுத்தில் தரவேண்டுமென்றும் அரசுக்கு ஒரு தூண்டிலை முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்கள் பலர் போட்டிருந்தனர்.
இதற்கான காரணத்தை எழுத்தில் வழங்குவதில் அரசுக்கு நிச்சயமாக சிக்கலாகவே இருந்திருக்கும். முஸ்லிம் காங்கிரஸ் கோரியவாறு கடந்த கால கோரிக்கைகளை நிறைவேற்றாமைக்கான காரணங்களை அரச தரப்பு எழுத்தில் வழங்கியிருந்தால் அதனை பகிரங்கப்படுத்துவதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் மக்களின் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பியிருக்கும். எனவே, இந்த விடயத்தில் அரசின் நிலைப்பாடு என்பது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளை, முஸ்லிம் காங்கிரஸை மக்களிடம் தூரமாக்கி வைக்கும் ஒரு செயலாகவும் கொள்ள முடியுமல்லவா?
எது எப்படியிருப்பினும் இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக நின்று ஒரே கருத்தை தெரிவித்து அரசுடனான பேச்சுக்கு தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் என்ற விடயம் அமைச்சர் ஹக்கீமின் தலைமையின் கீழ் முஸ்லிம் காங்கிரஸில் நிகழ்த்தப்பட்ட ஒரு நம்ப முடியாத மாபெரும் அதிசய சாதனையாகவே கருத வேண்டும்.
இதன் மூலம் தங்களுக்குள் எந்த முரண்பாடுகளும் இல்லை. அவ்வாறு இருந்தாலும் சமூகம் என்று வரும் போது ஐக்கியப்படுவோம் என்ற செய்தியை அவர்கள் அரசுக்குத் தெரிவித்து விட்டனர். ஆனால், அவர்களின் இந்த ஒற்றுமையானது ஆளுந்தரப்புக்கு சற்று மிளகாய் கடித்தது போன்ற உறைப்பைக் கொடுத்தே இருக்கும். இருப்பினும் இந்த ஒற்றுமை அவர்களுக்குள் தொடர்ந்து இருப்பதே சிறந்தது. எந்த விதத்திலும் அதன் மீது கண்திருஷ்டி பட்டு விடக் கூடாதுதான். அதிலும் வெளியார் கண்திருஷ்டியை விட உள்ளே உள்ளவர்களின் கண்திருஷ்டி மிக ஆபத்தானது.
இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்தவையே ஆதரிக்கும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றே கட்சியின் தொண்டர்கள் முதல் ஆதரவாளர்கள் வரை இன்றும் நம்பிக் கொண்டுள்ளனர். ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் இந்த நிலைப்பாட்டினை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற விடயம் இப்போது முழுமையாக தெரிய வந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கப் போவதாக வெளியான தகவலின் பிரதிபலிப்புகள் மூலமே இந்த விடயத்தை முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமல்ல.. அரசாங்கமும் நன்கு புரிந்து கொண்டிருக்கும். எனவே, சரியோ, பிழையோ அவ்வாறானதொரு தகவல் வெளிவந்தமை கூட முஸ்லிம் காங்கிரஸுக்கு நல்லதென்றே கூறத் தோன்றுகிறது. மக்கள் உணர்வுகளை நாடி பிடித்து பார்த்து அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
எது எப்படியிருப்பினும் மஹிந்த ராஜபக்ஷவுக்கே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியால் மட்டும் இன்று மேற்கொள்ள முடியாத நிலைமை தோன்றியுள்ளது. இது தொடர்பில் அவர்கள் மக்கள் முன் சென்று கலந்துரையாடி, கருத்துகளைப் பரிமாறியே தீர்மானங்களை எடுக்க முடியும். கொழும்பிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் கட்சியின் உயர்மட்ட அரசியல் பீடத்தை அழைத்து எந்த முடிவெடுத்தாலும் அதனை மக்கள் நிச்சயம் நிராகரிப்பர். மக்கள் கருத்தறிந்து எடுக்கப்படும் முடிவுகள் மட்டுமே அந்தக் கட்சியை எதிர்காலத்தில் நிமிர்ந்து நடக்கச் செய்யும்.
யாரை ஆதரிப்பது என்று கட்சி முடிவெடுத்தாலும் அவரை வெற்றியடையச் செய்யவும் தோற்கடிக்கவும் கூடிய வாக்குப் பலத்தைக் கொண்டவர்கள் மக்கள்தான். இதனை விடுத்து கட்சியின் செயற்குழுவினரும் அரசியல் உயர் பீடத்தினரும் மட்டும் வாக்களித்து ஒரு ஜனாதிபதியின் வெற்றியை தீர்மானிக்க முடியாது. இதுதான் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பில் வாக்காளர்களின் நிலைப்பாடு என்று கூறினாலும் தப்பில்லை.
கட்சிக்கு வாக்களித்து, வாக்களித்து மக்கள் ஒரு பக்கம் ஏமாற, கட்சியோ அரசிடம் கோரிக்கைக்கு மேல் கோரிக்கைகளை வைத்து ஏமாற… என்ற நிலைமை இனியும் தொடர்வதனை அனுமதிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தயாரில்லை. இந்தக் கட்சியின் கௌரவத்தைக் கூட இனி மக்கள்தான் காப்பாற்ற வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இந்தக் கட்சியின் கொழும்பு தீர்மானங்களையோ பிரகடனங்களையோ மக்கள் இனியும் நம்பி ஏமாறப் போவதும் இல்லை. அவற்றினை ஏற்கப் போவதும் இல்லை.
ஆனால், இவற்றுக்கெல்லாம் காரணம் இந்தக் கட்சியே தவிர அரசாங்கம் அல்ல என்பதனை மீண்டும் கூறியே ஆக வேண்டும். தங்களது பலவீனங்களை அரசிடம் இவர்கள் நாடி பிடிக்கச் செய்து விட்டனர். அதனால் இவ்வாறு இந்தக் கட்சி பலவீனமுற்றுள்ளது.
“எதில் நிற்கிறாய் என்பதில் உறுதியாக இரு எதில் விழுகிறாய் என்பதில் கவனமாக இரு.“ என்ற விடயங்கள் புரிந்த கொள்ளப்பட்டால் எல்லாம் சரியாகத்தான் நடக்குமல்லவா?
