ஐ.எஸ். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் இந்தியா எச்சரிக்கையாக உள்ளது – மத்திய உள்துறை அமைச்சர்
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பால் அச்சுறுத்தல் உள்ளதால், இந்தியா உஷராக உள்ளது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது:- “ எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கும் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகுக்கே ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளது. எனவே ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்க விவகாரத்தில் இந்தியாவும் எச்சரிக்கையாக உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த வெள்ளிக்கிழமை கால்பந்து மைதானம், இன்னிசை அரங்கு உள்ளிட்ட 6 இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் 129 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அந்நாட்டில் அவசர நிலையும் பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கருதப்படும் 170 இடங்களில் போலீசார் நேற்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர். போலீசார் நடத்திய சோதனையில் ராக்கெட் லாஞ்சர், எந்திர துப்பாக்கி, குண்டு துளைக்காத உடைகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 31 ஆயுதங்கள் சிக்கின. இதேபோல் வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டின் எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.
ஈராக்-சிரியா பகுதிகளில் உள்ள ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் தற்போது 20-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இணைந்து செயல்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
