திப்புசுல்தான் பிறந்தநாள் விழா கொண்டாட அனுமதிக் கேட்டு மனு
சென்னை, நவ. 18–
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இஸ்மாயில். இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக தீரமாக போரிட்டு, மறைந்தவர் திப்புசுல்தான். பொதுவாக முஸ்லிம் மதத்தில் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. இந்து மற்றும் கிறிஸ்துவ மதங்களில்தான் பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கம். ஆனால், எங்களது கட்சி, மதசார்பற்ற கட்சி என்பதால், திப்பு சுல்தானின் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தோம்.
இதற்காக குடியாத்தம், ஆலிகர் தெருவில் திப்பு சுல்தான் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தோம். இந்த ஆலிகர் தெருவில்தான், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுக்கூட்டம் நடத்துகிறது. இந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதிக் கேட்டு குடியாத்தம் போலீசில் கோரிக்கை மனுவை கொடுத்தேன். ஆனால், எங்களுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க மறுத்து குடியாத்தம் போலீசார் கடந்த 13–ந்தேதி உத்தரவிட்டுள்ளனர்.
எனவே, எங்களுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிடவேண்டும். இதற்காக போலீசார் விதிக்கும் எந்த ஒரு நிபந்தனைகளையும் ஏற்க நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சீராஜூதீன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு வருகிற 20–ந்தேதிக்குள் பதிலளிக்க குடியாத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
