துபாயில் நடந்த சாலை விபத்தில் 10 இந்தியர்கள் உட்பட 15 பேர் பலி

-துபாய்-
ஐக்கிய அரபுக் குடியரசின் தலைநகர் அபுதாபியிலிருந்து வடக்கே செல்லும் பிரதான சாலையில் நேற்று பயணித்துக் கொண்டிருந்த 30 இருக்கைகள் கொண்ட மினி பேருந்து ஒன்று முன்னால் சென்றுகொண்டிருந்த டிரக் ஒன்றின் பின்புறம் மோதியதில் தலைகீழாகக் கவிழ்ந்து ஐந்து கி.மீ தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது.

 

 

அப்போது அதில் பயணித்துக் கொண்டிருந்த 27 தொழிலாளர்களில் இந்தியர்கள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இதில் பலியானதாகத் தெரிவிக்கப்பட்ட 10 இந்தியர்களும் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்று அங்குள்ள இந்தியத் தூதரகத்தின் அதிகாரி தெரிவித்தார்.

 

 

விபத்து நடந்த சமயம் இவர்கள் அனைவரும் ஜெபெல் அலியில் உள்ள தங்களின் பணி நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்தனர் என்றும் துபாயின் மக்கள் தொகையில் 2.2 மில்லியன் மக்கள் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

இந்த விபத்தில் காயமடைந்த மற்ற தொழிலாளர்கள் சிகிச்சைக்காக ரஷித் மற்றும் அல் பரஹா மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இந்தியர்களும், வங்காளதேசத்தவர்களும் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்து முற்றிலுமாக சிதைந்து போனது. இதனுள் சிக்கியிருந்தவர்களை பேருந்தின் சிதிலங்களை வெட்டியெடுத்து காப்பாற்றியதாக துபாய் காவல்துறையின் மீட்புப் பிரிவு இணை இயக்குனரான கர்னல் அகமது அடிக் பர்க்விபா தெரிவித்தார்.

 
இந்த வருடத்தில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய விபத்து இது என்று அவர் கூறியுள்ளார். காவல்துறையின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் கமிஸ் மட்டர் அல் மசெய்னா முன்நின்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். இந்த விபத்து குறித்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் கூறப்படுகின்றது.

Previous post மெர்ஸ் நோய் ஒட்டகங்களினால் பரவலாம்: சவுதி எச்சரிக்கை
Next post சுரங்கத்தில் வாடிய தொழிலாளி 17 ஆண்டுகளுக்கு பின் மீட்பு