வீதி விபத்துக்களில் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று முதலிடம்-சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
-வி.சுகிர்தகுமார்-(TM)
அம்பாறை மாவட்டத்தில் அதிக வீதி விபத்துக்கள் இடம்பெறும் பிரதேசங்களில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு முதலிடத்தை பெறுகின்றது என அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எச்.எம்.மாகெதர தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.ஏ.கே. பண்டார தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இடைக்கால பரிசீலனை நிகழ்வின் விரிவுரையில் கலந்து கொண்டு விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், ‘ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் குற்றச்செயல்களும், விபத்துக்களும் இப்பிரதேசத்தில் அதிகரித்துள்ளது. அதேவேளை, கல்முனை பிரதேசத்தில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளது. இதற்கு காரணம், பொலிஸாரின் இரவு பகலான ரோந்து நடவடிக்கைகளே ஆகும் என’ அவர் சுட்டிக்காட்டினார்.
‘பொலிஸார் வெளிக்கடமைகளில் ஈடுபடும்போது கட்டாயம் கைத்துப்பாக்கியை வைத்துக்கொள்ள வேண்டும். மக்களை தாக்குவதற்கல்ல. சட்டத்தை கையிலெடுத்து குற்றச்செயல்கள் புரிவதற்கு முயற்சிக்கும் நபர்களுக்கெதிராகவும், பொலிஸார் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவுமே அவ்வாறு துப்பாக்கிகளை வைத்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.
‘அண்மைக்காலமாக இப்பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மண் அகழ்வில் பலர்; ஈடுபட்டுள்ளனர். அதற்கு எவ்வகையிலும் இடமளிக்கக் கூடாது என்பதுடன் கஞ்சா, களவான கால்நடை வியாபாரம், போதைப்பொருள் விற்பனைகள் போன்றன கட்டுப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு, பொய் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய வேண்டாம்.இவ்வாறான பொய்யான முறைப்பாடுகளை பதிவு செய்கின்றவர்கள், மற்றும் 119இற்கு தவறான தகவல்களை வழங்குகின்றவர்கள் தொடர்பில் விழிப்பாக செயற்பட வேண்டும்.’
அதேபோல், பொலிஸார் நேர்மையுடனும் பக்கச்சார்பின்றியும் செயற்பட வேண்டும் என்பதுடன் எக்காரணத்தை கொண்டும் இலஞ்சம் பெறுவதற்கு முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு இலஞ்சம் பெறுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடமையிலிருந்து உடன் நிறுத்தப்படுவதுடன் அவரது சந்ததியே அரசதொழில் பெற முடியாத நிலையில் சமூகத்தில் ஒதுக்கப்படுவார்கள்.
எது எவ்வாறாயினும் பொதுமக்கள் சட்டதிட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்பதுடன் பொலிஸாருக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய எவ்வித நடவடிக்கைகளுக்கும் ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது’ என கூறினார். (TM)
