வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவிகள் வழங்கக் கோரிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதில் மிகவும் கஷ;டங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். எனவே. அவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா. மூதூர், வெருகல், குச்சவெளி, சேருவில, தம்பலகமம், பட்டணமும் சூழலும் போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சில பகுதிகள் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும், நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்போருக்கு மட்டுமே சமைத்த உணவுகள் அரசினால் வழங்கப்பட்டு வருகின்றன. சில கிராமங்கள் முற்றாக நீரில் சூழப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் தங்கியிருக்கும் அளவு நலன்புரி நிலையங்களும் இல்லை. இதனால் அவர்களுக்கு எந்த உதவியும் அரசினால் வழங்கப்படவில்லை.
10 தினங்களுக்கு மேல் தொடர்ந்து வெள்ளம் இருப்பதால் அன்றாடம் தொழில் செய்வோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சமூக சார் அமைப்புக்கள் உதவ முன் வந்த போதிலும் சட்டங்கள், சுற்றறிக்கைகளைக் கூறி அவைகளுக்கு மட்டுப்பாடு விதிக்கப்படுவதால் அவை உதவ முடியாத நிலை காணப்படுகின்றது.
சுற்றறிக்கைகளுக்கு அப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்திருக்கின்ற போதிலும் திருகோணமலை மாவட்டத்தில் இறுக்கமான நிர்வாக நடைமுறையே பின்பற்றப்படுகின்றது. இதனால் அப்பாவிப் பொதுமக்களே மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
பொதுமக்களை கருத்தில் கொண்டு சகல உதவிகளையும் வழங்க அரசாங்கம் உடன் முன்வரவேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
