கப்பலைக் காணோம்
-BBC-
இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாரை மாவட்டம் ஓலுவில் துறைமுகம் திறக்கப்பட்டு ஆறு மாதங்களாகின்ற போதிலும் அங்கு இதுவரை வர்த்தகக் கப்பல் போக்குவரத்து எதுவும் நடைபெறாமல் உள்ளது குறித்து பிரதேச மக்கள் கவலையும் விசனமும் வெளியிட்டுள்ளனர்.
துறைமுகத்தில் எந்தவொரு கப்பலும் இதுவரை நங்கூரப்படாத நிலையில், கப்பலை காணாத துறைமுகமாக தமது பிரதேசத்திலுள்ள துறைமுகம் விளங்குவதாக உள்ளுர் மக்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
மறைந்த-ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம். எச். எம் . அஷ்ரப் சந்திரிகா குமாரனதுங்காவின் பதவிக் காலத்தில் துறைமுக அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக பதவி வகித்த காலத்தில் மீன்பிடித் துறைமுகம் மற்றும் வர்த்தக துறை முகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
டென்மார்க் அரசாங்கத்தினால் 10 வருட கடன் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட துறைமுக வேலைகள் முடிவடைந்த நிலையில், கடந்த வருடம் செப்டம்பர் முதல் வாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வர்த்தக மற்றும் மீன்பிடித்துறை முகங்களை உள்ளக்கிய ஒலுவில் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டது;.
மீன்பிடித் துறைமுகத்தை பொறுத்தவரை, மீன்பிடி படகுகள் அதில் நங்கூரமிடுவதால் அது சுறுசுறுப்புடன் இயங்குகிறது. ஆனால் வர்த்தக துறைமுகத்தை பொறுத்தவரை, துறைமுகப் பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில், அங்கு இராணுவம் மற்றும் கடற்படையினரே தற்போது காணப்படுவதாக பிபிசிக்காக அங்கு சென்றிருந்த எமது செய்தியாளர் இரா. உதயகுமாரிடம் உள்ளுர் மக்கள் தெரிவித்தனர்.
தென்கிழக்கு மக்களின் சமூக பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக அமையும் என்ற எதிர்பார்ப்புகளை கொண்டிருந்த தங்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்துள்ளதாகவும் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை துறைமுக அபிவிருத்தி பணிக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய நஷ்ட ஈட்டு கொடுப்பணவு கூட காணி உரிமையாளர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் துறைமுக அபிவிருத்தி அதிகார வாரியம் மீது குறித்த காணி உரிமையாளர்களினால் முன்வைக்கப்படுகிறது.
தங்களது காணிகளின் பெறுமதி அரசாங்கத்தினால் ஆறு வருடங்களுக்கு முன்னதாக மதிப்பீடு செய்யப்பட்டு இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டும், அது இதுவரை தமது கைகளுக்கு கிடைக்கவில்லை என்ற அங்கலாய்ப்புடன் அவர்களில் பலரும் காணப்படுகிறார்கள்.
துறைமுக திறப்பு விழாவின் பிரதேச அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால், ஒரு சிலருக்கு முதற்கொடுப்பணவு என கூறி வழங்கப்பட்ட தொகைக்குரிய காசோலை கூட பணக்கொடுப்பணவு நிறுத்தம் என குறிப்பிடப்பட்டு வங்கியினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த காசோலைகளை ஜனாதிபதியே அவர்களிடம் வழங்கியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.-BBC

