குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை – ஹசன் அலி
முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக மாவட்டம் கோரியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
கிழக்கில் தனி நிர்வாக அலகு ஒன்றை முஸ்லிம் காங்கிரஸ் கோரியதாகவும் அதற்கு இணங்காத காரணத்தினால், ஆளும் கட்சியை விட்டு விலகியதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும்,இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என ஹசன் அலி சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாணசபை அமைக்கும் தருணத்தில் இவ்வாறான ஓர் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அண்மையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளின் போது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் ஊடகங்களில் காண்பித்த ஆவணமானது கிழக்கு மாகாணசபை நிறுவும் போது சமர்ப்பிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசிய உடன்படிக்கை எதனையும் கைச்சாத்திடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அளித்த வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை எனவும் அதன் காரணமாகவே இவ்வாறு எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்ப தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
